இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் - இங்கிலாந்து துணை கேப்டன்
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.;
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 68 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 133 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து 2-வது போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியின் போது காற்று சுத்தமாக இல்லாமல் புகை மூட்டமாக இருந்ததாக இங்கிலாந்து துணை கேப்டன் ஹரி புரூக் தெரிவித்துள்ளார். அதனால் பந்தை பார்த்து அடிக்க முடியாமல் போனதால் அதுவும் தோல்விக்கு ஒரு காரணம் என்று அவர் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எனவே சென்னையில் ஆவது தெளிவான காற்று இருக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"வருண் சக்கரவர்த்தி மிகவும் நல்ல பவுலர். ஆனால் அன்றைய நாள் இரவில் புகை அதிகமாக இருந்தது. அதனால் பந்தை பார்த்து அடிப்பது கடினமாக இருந்தது. எனவே சென்னையில் காற்று தெளிவாக இருக்கும் என்று நம்புகிறோம். அப்போதுதான் எங்களால் பந்தை இன்னும் கொஞ்சம் எளிதாக பார்த்து அடிக்க முடியும். டி20 கிரிக்கெட்டில் சுழல் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. குறிப்பாக நான் அதிரடியாக விளையாட முயற்சிப்பதால் அவுட்டாகிறேன்.
அதே சமயம் அந்த பந்துகளை சமாளிக்க என்னிடம் வழி இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் மிடில் ஆர்டரில் வருவதால் பெரும்பாலும் சுழல் பந்துகளையே ஆரம்பத்தில் எதிர்கொள்வேன். அதனாலேயே ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னுடைய புள்ளி விவரங்கள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விளையாட்டில் விமர்சனங்கள் வருவது சகஜம். இந்த தொடருக்கு நான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக எங்களுடைய பயிற்சியாளர் மெக்கல்லம் முதல் நாள் இரவுக்கு முன்பாக சொன்னார். அதைக் கேட்டு புன்னகையுடன் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்று கூறினார்.