பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராகும் சிஎஸ்கே முன்னாள் வீரர்..?

பி.சி.சி.ஐ.-ன் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-09-21 10:22 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

தொடர்ந்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதனிடையே பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அத்துடன் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால் இந்த செய்திகளுக்கு சச்சின் மறுப்பு தெரிவித்தார். அத்துடன் பி.சி.சி.ஐ. தலைவராக தாம் பொறுப்பேற்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த பதவிக்கு இந்திய முன்னாள் வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராக டெல்லி முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி.சி.சி.ஐ.-ன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிதுன் மன்ஹாஸ் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்