பாகிஸ்தானில் பிறந்த வீரர்களுக்கு இந்தியா விசா மறுப்பு? டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல்
அமெரிக்க அணிக்காக விளையாடும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன;
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் உள்ளன. குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க அணிக்காக விளையாடும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மொஹ்சின் மற்றும் எசான் அடில் ஆகியோரின் விசா அனுமதி தொடர்பான செயல்முறை இன்னும் நடைபெற்று வருவதாகவும், இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய உயர்திகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நான்கு வீரர்களில் சிலர் பாகிஸ்தானில் பிறந்தவர்கள் என்பதாலேயே விசா மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், நேபாளம், கனடா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளின் அணிகளிலும் பாகிஸ்தானில் பிறந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதனால், அவர்களும் இதுபோன்ற விசா சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.