மகளிர் பிரிமீயர் லீக் - ஹர்மன்பிரீத் அபாரம்...குஜராத்தை வீழ்த்திய மும்பை
ஹர்மன்பிரீத் தனது 10-வது டபிள்யூ.பி.எல் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.;
சென்னை,
5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜார்ஜியா 40 ரன்களும், பார்தி புல்மாலி 36 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 194 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக குணாளன் கமலினி மற்றும் ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட குணாளன் கமலினி 13(12) ரன்களிலும் ஹேலி மேத் 22 (12) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அமன்ஜோத் கவுர் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் அணியின் ரன்களை மெதுவாக உயர்த்தினர்.
அதிரடி காட்டிய அமன்ஜோத் கவுர் 40(26) ரன்களில் அவுட்டானார். பின்னர் ஹர்மன்பிரீத் கவுருடன் நிக்கோலா கேரி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஹர்மன்பிரீத் தனது 10-வது டபிள்யூ.பி.எல் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து மும்பை அணி இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை மும்பை அணி வீழ்த்தியது. ஹர்மன்பிரீத் 71(43) ரன்களுடனும் நிக்கோலா கேரி 38(23) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் சோபி டெவின், ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் காஷ்வீ கௌதம் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.