இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த மனிதர் அவர்தான் - பாக்.முன்னாள் வீரரின் பதிவு வைரல்

ஆசிய கோப்பையில் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.;

Update:2025-09-20 07:00 IST

image courtesy:PTI

லாகூர்,

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதனை பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ‘பன்றி’ உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது அமீர், விராட் கோலியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.

முகமது அமீர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்று மட்டும் நிச்சயம், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த வீரர் மற்றும் மனிதர் விராட் கோலி. அவரை மதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் விராட் கோலி தன்னுடைய பேட்டை அமீரிடம் கொடுத்த புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்