பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்னை வீழ்த்தி ஹோபார்ட் திரில் வெற்றி
டாஸ் வென்ற மெல்போர்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.;
ஹோபார்ட் ,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் , மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மெல்போர்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வெப்ஸ்டர் 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் களமிறங்கியது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி மெல்போர்ன் 7 ஓவர்கள் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணி 7 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மெல்போர்ன் ஸ்டார்சை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேலஞ்சர் சுற்றுக்கு ஹோபார்ட் ஹரிகேன்ஸ் முன்னேறியுள்ளது.
சிட்னியில் நாளை மறுதினம் நடைபெறும் சேலஞ்சர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ் அணியை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி 25ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கார்சர்சை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.