அபிஷேக் சர்மா அதிரடி... நியூசிலாந்து அணிக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.;
மும்பை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷான் கிஷன் 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுபுறம் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா, 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரது 7-வது டி20 அரைசதம் இதுவாகும்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள்(5 பவுண்டரி, 8 சிக்ஸர்) விளாசினார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கேக்கப் டப்பி மற்றும் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளும், கிறிஸ்டன் கிளார்க், இஷ் சோதி மற்றும் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, நியூசிலாந்து அணி 239 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.