முதல் டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது;
மும்பை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ரிங்கு சிங் 44 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், ராபின்சன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ரவீந்திரா 1 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மார்க் 39 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தியா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுதினம் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.