வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன் - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.;
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியதை நினைத்து பெருமை அடைவதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம்தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச்சிறப்பாக முடிவடைந்துள்ளது. இந்த முழுத் தொடரிலும் இரு அணிகளும் மிகுந்த ஆற்றலையும் முயற்சியையும் செலுத்தியுள்ளன. இதில் பங்கேற்பது ஒரு அற்புதமான ஒன்றாக இருந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.
இரு அணிகளும் கடுமையாகப் போராடிய தொடர். நானும், சுப்மனும் இதற்கு பங்களித்ததைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். ஆமாம், இது அருமையாக இருந்தது. உங்களுக்குத் தெரியும், இந்தியா-இங்கிலாந்து எப்போதும் ஒரு பெரிய தொடர். இந்த ஆட்டத்தை (கடைசி போட்டி) தவறவிட்டு பங்களிக்க முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமளித்தது" என்று கூறினார்.