அணியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை..? - இந்திய வீரர் வருத்தம்
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரகானே சில கருத்துகளை கூறியுள்ளார்.;
image courtesy: AFP
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஆன ரகானே கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அவர், மீண்டும் இந்திய அணியின் தேர்வுக்குழுவினரை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிக வருத்தத்துடன் சில கருத்துகளை கூறியுள்ளார்.
அதில், "சில வருடங்களுக்கு முன்பு நான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டேன். ஆனாலும் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென அணியில் இருந்து என்னை நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் என்னை திடீரென புறக்கணித்தார்கள்.. இது குறித்து நான் யாரிடமும் எதுவும் கேட்கப் போவது கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது. என்னுடைய சிறப்பான செயல்பாடு மூலம்தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முயற்சிப்பேன். எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது.
அந்த வகையில்தான் தற்போது ரஞ்சி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். இதன் மூலம் நிச்சயம் என்னால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் என்றும் நம்புகிறேன். என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை பி.ஆர் வைத்துக்கொள்ள கூறுகிறார்கள். ஆனால் நான் என்னுடைய பேட்டிங்கின் மூலம் எனக்கான விளம்பரத்தை தேடிக் கொள்கிறேன்" என்று கூறினார்.