என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது ஸ்ரீசாந்த்... - உருக்கமாக பேசிய ஹர்பஜன்

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனில் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தார்.;

Update:2025-07-21 14:24 IST

மும்பை,

ஐபி.எல். தொடரின் முதல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய முன்னாள் வீரர்களான ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் சிங் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். இது அந்த சமயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீசாந்த் உடனான இந்த சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், "என் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டும் என்றால், அது ஸ்ரீசாந்துடன் நடந்த சண்டைதான். பல ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது . நான் அதனை செய்திருக்கக்கூடாது. நான் 200 முறை மன்னிப்பு கேட்டேன். அந்த சம்பவத்திற்குப் பிறகும் பல வருடங்கள் கழித்து நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன், எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் நான் மன்னிப்பு கேட்டு வருகிறேன்.

பல வருடங்களுக்குப் பிறகும் என்னை காயப்படுத்தியது என்னவென்றால், நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் மிகவும் அன்போடு பேசிக்கொண்டிருந்தபோது, அவள் 'நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்' என்றாள். அந்த வார்த்தைகள் என் மனதை நொறுக்கின. நான் கண்ணீரை அடக்க முடியாத நிலைக்குச் சென்றேன். என் மீதான அவளது அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவள் என்னை ஒரு கெட்ட மனிதனாகவே பார்க்கிறாளோ? 'என் அப்பாவை அடித்தவன்' என்றே நினைக்கிறாளோ? நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக அவரது மகளிடம் இன்னும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்