அப்படி நடந்தால் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடலாம் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறினார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களும் நன்றாக செயல்பட்டால் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாட முடியும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பாருங்கள், அதிகமாக பந்துவீசுவதும் குறைவாக பந்துவீசுவதும் காயங்களை ஏற்படுத்தும். சில பந்து வீச்சாளர்கள் காயம் அடைவதற்கு இவை சரியான வழியாகும். ஒரு போட்டியில் பும்ரா எத்தனை ஓவர்கள் பந்து வீசுவார் என்பதை நம்மால் கூற முடியாது. ஆனால் போட்டியில் அவர் வீசும் ஓவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவருக்கான பயிற்சி அமர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். அவர் ஜிம்மில் வேலை செய்வது, அல்லது பிசியோக்களுடன் ஏதாவது வேலை செய்வது என நேரத்தை பிரித்துக் கொள்ள வேண்டும். அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக அமைகிறது.
பும்ரா அணியில் இருப்பது மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கிறது. அவர் சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், மற்ற பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறார். எனவே அவர் 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும். அதற்கு மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பும்ராவை 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்க முடியும்" என்று கூறினார்.