இது கூட தெரியாமல் பும்ராவை விமர்சிக்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல - இந்திய முன்னாள் வீரர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியதை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.;

Update:2025-08-30 19:26 IST

image courtesy:PTI

மும்பை,

அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ( 5 போட்டிகள்) இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறிப்பிட்ட 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடினார். பணிச்சுமையை காரணம் காட்டி 2 டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல இந்திய முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.

இதில் இர்பான் பதான், ஒரு போட்டியில் நீங்கள் விளையாடும்போது, பணிச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா வகையிலும் போட்டியை வெல்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று பும்ரா நீண்ட ஸ்பெல் வீசாததை விமர்சித்தார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் 5 போட்டிகளில் விளையாட முடியாது என்பது தெரியாத அளவுக்கு தாம் முட்டாள் அல்ல என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். உண்மையில் 3 போட்டிகளில் விளையாடும் பும்ரா தேவைப்படும் போது 5 - 6 ஓவர்களுக்கும் அதிகமான நீண்ட ஸ்பெல்லை வீசுவதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது என்றே தாம் விமர்சித்ததாக பதான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “ஜஸ்ப்ரித் பும்ராவின் அணுகுமுறையை நான் கேள்வி கேட்பதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. முதுகில் காயத்தை சந்தித்த பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதை செய்பவரை (பும்ரா) நான் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? அதை நான் செய்ய மாட்டேன். யாரும் அவ்வளவு முட்டாள் இல்லை. ஆனால் ஒருமுறை நீங்கள் களத்துக்கு சென்று விட்டால் நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

5 - 6 ஓவர்களை வீசினால் போதும் என்பது போன்ற நிலையை அணி நிர்வாகம் தொடர்ந்து அனுமதித்தால், நம்மால் நீண்ட காலம் வெற்றி முடிவுகளைக் காண முடியாது என்று உறுதியாக சொல்வேன். பும்ராவின் பணிச்சுமையை நாம் நிர்வாகிக்க வேண்டும். ஆனால் லார்ட்ஸ் டெஸ்ட் போன்ற ஒரு முக்கியமான நேரத்தில் கூட, பணிச்சுமையை நிர்வகிப்போம் என்றால், முடிவு எப்படி வரும்? தேவைப்படும்போது நீங்கள் அதைத் தள்ளலாம். புத்துணர்ச்சியை மீட்டெடுப்பது போட்டி முடிந்த பின் நடக்கும். ஆனால் நீங்கள் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறீர்கள். அந்த 3 போட்டிகளிலும் சில ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை மட்டுமே வீசினால் அது அணிக்கு கடினமாகிவிடும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்