2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா... முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறல்
2-வது இன்னிங்சின் முதல் ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசினார்.;
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரை எதிர்கொண்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால், 4-வது பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து டக் அகி ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் சந்தித்த முதல் பந்திலேயே (அந்த ஓவரின் 5-வது பந்து) 'கோல்டன் டக்' ஆகி ஏமாற்றினார். இதனால் வோக்ஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு உருவானது. ஆனால் அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 6-வது பந்தை தடுத்து ஆடி ஹாட்ரிக் விக்கெட் விழாமல் பார்த்து கொண்டார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 ஓவர்கள் முடிவில் ஒரு ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இந்தியா இன்னும் 310 ரன்கள் அடித்தாக வேண்டும் என்ற சூழலில் தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் ஒரு ரன்னுடனும், சுப்மன் கில் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.