வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி
வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.;
கோப்புப்படம்
சிட்னி,
ஐ.பி.எல். பாணியில் வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகே அத்தகைய போட்டிகளில் விளையாட முடிகிறது. இந்த நிலையில் இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், இந்தியா மிகப்பெரிய நாடு. அனைவருக்கும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. எல்லோராலும் அதை சாதிக்கவும் முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடாத வீரர்கள் அனேகமாக சி அல்லது 9 கிரேடு ஒப்பந்தத்தில் தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட வீரர்களை ஏன் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடுக்க வேண்டும்.
எப்படி ஐ.பி.எல். போட்டி பல இளம் வீரர்கள், உயர்தர வீரர்களுடன் இணைந்து விளையாட உதவுகிறதோ, அதே போல் இத்தகைய லீக் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு கைகொடுக்கும். அத்துடன் அழுத்தத்தை சிறப்பாக கையாள கற்றுக்கொள்வர்கள். ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங் போன்ற வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வர்கள்.
அது அவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். வெளிநாட்டில் நடக்கும் தொடர்களில் ஆடுவதை விட சிறந்த கல்வி எதுவுமில்லை. அந்த அனுபவம் கிரிக்கெட் அடிப்படையில் மட்டுமல்லாமல், வெவ்வேறு கலாசாரங்களையும், முறைகளையும் புரிந்து கொள்ளவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.