சர்வதேச கிரிக்கெட்: கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஷாய் ஹோப் சதமடித்தார்.;
image courtesy:PTI
கயானா,
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப்பின் அபார சதத்தின் (102 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
ஷாய் ஹோப் அடித்த முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் சதம் இதுவாகும். இதற்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஹோப் சதமடித்துள்ளார்.
இதன் மூலம் 3 வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.
இதனையடுத்து 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 37 பந்துகளில் சதத்தை எட்டினார். முடிவில் ஆஸ்திரேலியா வெறும் 16.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. டிம் டேவின் 102 ரன்களுடன் களத்தில் இருந்தார்.