ஐ.பி.எல்.: சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுகிறேனா..? அஸ்வின் வெளிப்படை
சென்னை அணியிலிருந்து வெளியேற அஸ்வின் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.;
image courtesy:PTI
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனில் சென்னை அணிக்காக ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி அணிக்கு பின்னடைவை கொடுத்தார். இதனால் சில போட்டிகளில் சென்னை அணி அவரை வெளியேற உட்கார வைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.
இந்த சூழலில் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு (2026) முன் தன்னை விடுவிக்குமாறு அஸ்வின், சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மூத்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பிலிருந்தோ அஸ்வின் தரப்பிலிருந்தோ எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளிவரமால் இருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக சில கருத்துகளை பேசியுள்ளார்.
அதில், “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடினேன். அங்கே எனது முதல் வருடம் முடிந்த பிறகு, தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் என்னுடைய செயல்திறன், அவர்களுடைய எதிர்பார்ப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தது. அத்துடன் அடுத்த வருடம் விளையாடுவதற்காக என்னுடைய ஒப்பந்தத்தை புதுப்பித்ததாகவும் தெரிவித்தார்கள். அப்படி ஒவ்வொரு ஐபிஎல் தொடர் முடிந்த பின்பும் ஒரு வீரரை தொடர்புகொண்டு அவரை தக்க வைக்கிறோமோ அல்லது விடுவிக்கிறோமோ என்பதை தெரிவிப்பது அணி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
அந்த வகையில் சஞ்சு சாம்சன் அல்லது நான் எங்களுடைய அணியில் தக்க வைக்கப்படுகிறோமா அல்லது விடுவிக்கப்படுகிறோமா என்பதை தெரிந்து கொல்லும் உரிமையைப் பெற்றுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில், அது என் கைகளில் இல்லை. நான் வருங்காலம் பற்றிய தெளிவை கேட்கிறேன். ஆனால் இது குறித்து வரும் செய்திகள் எதுவும் வீரர்களிடமிருந்து வரவில்லை. சாம்சன் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. அது வதந்தியா? அல்லது அணி நிர்வாகத்திடம் இருந்து வரும் செய்தியா? யார் அதை உருவாக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என கூறினார்.