ஐ.பி.எல்.: சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
முழங்கை எலும்பு முறிவு காரணமாக கெய்க்வாட் நடப்பு ஐ.பி.எல். சீசனிலிருந்து விலகியுள்ளார்.;
image courtesy:PTI
சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரராக இடம்பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கு பிரித்வி ஷா உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.