கம்பீரின் பதவிக்கு ஆபத்தா..? பி.சி.சி.ஐ. தரப்பில் வெளியான தகவல் கூறுவது என்ன..?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-11-29 14:41 IST

image courtesy:PTI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.

கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

தோல்வி எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவரை நீக்க வேண்டும். பரீட்சார்த்த முயற்சி என்ற பெயரில் அணியை சீரழித்துக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது உள்ள குமுறலை கொட்டி தீர்த்தனர். கும்பிளே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அவரது செயல்பாட்டை சாடினர். இதனால் அவரது பதவிக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போதைக்கு அவரது பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து இல்லை என்று பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் போட்டி வர ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் (ஆகஸ்டு மாதம்) இருக்கிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தொடருவார். வேறு எந்த முடிவும் பரிசீலிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்