இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் - முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;
image courtesy:PTI
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது போட்டி வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், 5வது போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டிற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை விளையாட வைத்து, சரியான பந்துவீச்சு தாக்குதலை கவுதம் கம்பீர் தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நாம் தொடர்ந்து இதே போல் பேட்டிங் செய்தால், இந்த போட்டியில் வெற்றி பெறலாம்.
இது ஒரு இளம் அணி, மேலும் இந்த அணி மீண்டும் கட்டமைக்கப்படுவதால், அவர்களுக்கு நாம் சிறிது நேரம் கொடுக்க வேண்டும். நான்காவது இன்னிங்ஸில் அவர்கள் பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த விதத்தைப் பார்க்கும் போது, லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வியடைந்ததற்கு இந்தியா வருத்தப்படும். ஏனெனில் மான்செஸ்டரில் ஐந்தாவது நாளில் அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
ஆனால் லாட்ஸில் 190 ரன்களை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியதே அதற்கு காரணம். நீண்ட காலத்திற்குப் பிறகு, பல இந்திய வீரர்கள் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் இவ்வளவு ரன்கள் எடுத்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்று, மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.
இந்த இளம் வீரர்கள் நாட்டிற்காக நீண்ட காலம் விளையாடுவார்கள், மேலும் இங்கிலாந்தில் அவர்களின் செயல்திறன் நிச்சயமாக அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும். அதனால் நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.