அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வோம் - சுப்மன் கில்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.;
Image Courtesy: @BCCI
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 5ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும் (206 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் (185 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கொடுத்துள்ளது. அடுத்தப் போட்டியை வென்று நாங்கள் தொடரை சமன் செய்வோம் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் ரன்களை அடித்தது முக்கியமல்ல. நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நடுக்கங்கள் இருக்கும்.
அது நான் எந்தளவுக்கு நாட்டுக்காக விளையாட விரும்புகிறேன் என்பதைச் சொல்கிறது. முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் அடித்தோம். ஆனால் நன்றாக செட்டிலான எங்கள் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே வெற்றியை எதிரணியிடம் இருந்து பறிக்க முடியும்.
துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. ஆனால் அதை 2வது இன்னிங்ஸில் செய்ததில் மகிழ்ச்சி. பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போட்டியை வெல்லும் வரை எனக்கு டாஸ் முக்கியமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.