இறுதிப்போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் - சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக்.வீரர் பதில்

நடப்பு ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.;

Update:2025-09-25 09:21 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் பாகிஸ்தான்- வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 4 புள்ளியுடன் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோற்கும் அணி வெளியேறும். இலங்கை ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 2 முறை வீழ்த்தி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 15 ஆட்டங்களில் 12-ல் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.

இந்த சூழலில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறோம். எனவே இனி அவர்கள் எங்களுக்கு இணையான சவால் அளிக்கக்கூடிய அணி என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடி சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சூர்யகுமார் விருப்பப்படி எதுவேண்டுமானாலும் சொல்லட்டும். இது அவரது கண்ணோட்டம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது. அப்போது என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். ஆசிய கோப்பையை வெல்வதற்கே இங்கு வந்துள்ளோம். அதில் கவனம் செலுத்துவோம். இறுதிப்போட்டியில் யாரையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறவில்லைதான், அதை மாற்றிக் காட்டுவோம்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்