டெல்லிக்கு எதிரான போட்டி: ஆட்ட நாயகன் விருது வென்ற சாய் சுதர்சன் கூறியது என்ன..?

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சாய் சுதர்சன் சதம் அடித்தார்.;

Update:2025-05-19 18:47 IST

image courtesy:twitter/@IPL

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 93 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆட்ட நாயகன் சாய் சுதர்சன் அளித்த பேட்டியில், "அணியை வெற்றி பெற செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீசனில் அவ்வாறு செய்வதை நான் சில முறை தவறவிட்டேன். இடைவெளியில் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்தேன். அது இன்று பலனளித்துள்ளது. 6 ஓவர்கள் முடிந்ததும் டெல்லி அணியினர் நன்றாக பவுலிங் செய்தனர். அப்போது நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்து சென்று விளையாட விரும்பினோம்.

12வது ஓவருக்குப்பின் 2 பெரிய ஓவர்கள் கிடைத்தது. இதற்கு முந்தைய போட்டிகளில் ரிஸ்க் எடுத்து அவுட்டானேன். போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று விளையாடி எனது ஆட்டத்தை மேம்படுத்த முடியும் என்று நான் நம்ப தொடங்கியுள்ளேன். எனது பேட்டிங்கில் பெரிய மாற்றம் ஒரு பேட்டராக அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் மனரீதியாக நான் மேம்பட்டுள்ளேன்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 15வது ஓவருக்கு பின்பு விளையாடுவதில் என்னுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும். கில் மற்றும் எனக்கு இடையே நிறைய புரிதல் இருக்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடும்போது ஸ்டரைக்கை மாற்றுவது முக்கியம். நான் தவறு செய்யும்போது அவர் சுட்டிக்காட்டுகிறார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்