சச்சினின் சாதனையை நெருங்க கூடிய ஒரேயொரு பேட்ஸ்மேன் இவர்தான்... ஆலன் டொனால்டு புகழாரம்
சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் என மொத்தம் 34,357 ரன்களுடன் முன்னணியில் உள்ளார்.;
ஜோகன்னெஸ்பர்க்,
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வலது கை வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் பிரபல முன்னாள் வீரரான ஆலன் டொனால்டு கூறும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை நெருங்க கூடிய ஒரேயொரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இருப்பார் என புகழாரம் சூட்டினார்.
இன்றைய போட்டியில் கோலி 25 ரன்கள் சேர்த்தால், சர்வதேச போட்டிகளில் 28 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் வரிசையில், சச்சின், இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா ஆகியோருக்கு அடுத்து 3-வது இடம் பிடிப்பார். 42 ரன்கள் சேர்த்தால், சங்கக்காராவை (28,016 ரன்கள்) பின்னுக்கு தள்ளி விட்டு, அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக ரன் எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.
சர்வதேச கிரிக்கெட்டில், கோலி இதுவரை 556 போட்டிகளில் பங்கேற்று, 623 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,975 ரன்களை சேர்த்திருக்கிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி, 84 சதங்களையும் மற்றும் 145 அரை சதங்களையும் அவர் எடுத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் இதுவரை அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் என மொத்தம் 34,357 ரன்களுடன் முன்னணியில் உள்ளார்.