நியூசிலாந்து அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் 125 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
image courtesy:twitter/@BLACKCAPS
புலவாயோ
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரண்டன் டெய்லர் (44 ரன்கள்) மிடில் ஆர்டரில் தபட்ஸ்வா சிகா (33 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே 100 ரன்களை கடந்தது. இவர்களை தவிர யாரும் 15 ரன்களை கூட தாண்டவில்லை.
48.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளும், சக்காரி பவுல்க்ஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.