நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் விலகல்
நியூசிலாந்து அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.;
Image Courtesy: @ICC / @BLACKCAPS
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
அதேசமயம் 2021ம் ஆண்டு முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்நிலையில், வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.
டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.