தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது - பும்ராவுக்கு இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஆதரவு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-10 18:15 IST

image courtesy:PTI

மும்பை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது அவருக்கு எதிராக விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் பும்ராவின் உடற்தகுதி தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முதுகில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருக்கிறார் என்பது போல் இல்லை. மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய காயம் என்பது சிறிய விஷயம் அல்ல, மிகவும் தீவிரமான ஒன்று.

சில மாதங்களுக்கு முன்பு, அவர் ஆஸ்திரேலியாவில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டப்பட்டார். இப்போது, அவர் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகிறார். குறிப்பிட்ட போட்டிகளை தேர்வு செய்து விளையாடுகிறார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அது அப்படி கிடையாது. அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் அவர் மோசமாக செயல்பட்டாரா? அவர் 2 ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.

அவருடைய உடல் எதற்கு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் செயல்படுகிறார். எனவே அவரது உடற்தகுதியையும், காயத்தையும் குறித்து தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது. அவர் நலமுடன் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவருடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என அவருக்கு மட்டுமே தெரியும். அறுவை சிகிச்சைக்கு பின் இந்தியாவுக்காக அவர் விளையாடுவது பெரிய விஷயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்