ஓய்வு பெற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை: அஸ்வின்

. அணி நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் ஓய்வு முடிவை எடுத்ததாக பேசப்பட்டது.;

Update:2025-10-10 08:56 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். அத்துடன் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் விடைபெற்றார். அடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் போட்டியில் விளையாட இருக்கிறார்.

39 வயதான அஸ்வின் ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் ஓய்வு அறிவித்து நாடு திரும்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் சர்ச்சையையும் கிளப்பியது. அணி நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் ஓய்வு முடிவை எடுத்ததாக பேசப்பட்டது.

இந்த நிலையில் அஸ்வின் தனது ஓய்வு குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் யூடியூப் சேனலில் பேசுகையில் கூறியதாவது:-

இந்திய அணியில் இடமில்லை என்றோ, ஓய்வு பெற்று விடு என்றோ என்னை யாரும் சொல்லவில்லை. உண்மையில் நான் ஓய்வு முடிவை எடுக்கும் முன்பு இரண்டு மூன்று நபர்கள் என்னை அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். தொடர்ந்து நான் விளையாட வேண்டும் என்று விரும்பினார்கள். அதையும் மீறி ஓய்வு முடிவை எடுத்தேன்.

கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீண்டும் ஒரு முறை நன்கு யோசி என்று கூறினார்கள். ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். தேர்வு குழு தலைவர் அகர்கரிடம் அதிகம் பேசவில்லை. ஓய்வு பெற்றது எனது தனிப்பட்ட முடிவு. என்னை யாரும் வற்புறுத்தவில்லை.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்