ஆர்.சி.பி.-க்கு அல்ல... சிராஜ் பதிலடி கொடுத்ததே அவர்களுக்கு தான் - சேவாக்
ஆர்.சி.பி-க்கு எதிரான ஆட்டத்தில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.;
Image Courtesy: @IPL / @gujarat_titans / @mdsirajofficial
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் லிவிங்ஸ்டன் 54 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த 7 வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த அவர் சமீப வருடங்களாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதன் காரணமாக இந்த வருடம் அவரை பெங்களூரு அணி கழற்றி விட்டதைத் தொடர்ந்து குஜராத் அணி வாங்கியது. தொடர்ந்து பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அதனால் தம்மைக் கழற்றி விட்ட ஆர்.சி.பி அணிக்கு சிராஜ் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.
இந்நிலையில் சிராஜ் உண்மையில் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளதாகவும், இதே வேகத்தில் சிராஜ் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சிராஜ் சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் தனது ரெக்கார்டை தொடர்ந்தார். தனது முதல் 3 ஓவர்களில் அவர் 12 -13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் 4-வது ஓவரை வீசியிருந்தால் அவர் 4-வது விக்கெட்டை எடுத்திருப்பார். பிட்ச்சில் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஏதோ ஒரு வகையில் அவர் மனதளவில் காயத்தைச் சந்தித்துள்ளார்.
அதனால் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. என்னை தேர்வு செய்யாத உங்களுக்குத் தற்போது எனது திறமையைக் காண்பிக்கிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். இதே வேகத்தில் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரு - குஜராத் ஆட்டம் முடிந்த பின்னர் பெங்களூருக்கு எதிராக ஆடியது சற்று உணர்ச்சிவசமாக இருந்ததாக சிராஜ் கூறினார்.