ஒரு நாள்... என் சாதனையை இந்த வீரர் முறியடிப்பார்; பி.சி.சி.ஐ. துணை தலைவர் கேள்விக்கு சச்சின் பதில்
சச்சின், 664 போட்டிகளில் 34 ஆயிரத்து 357 ரன்களையும், 100 சதங்களையும் அடித்துள்ளார்.;
புதுடெல்லி,
பி.சி.சி.ஐ. அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஒரு நாள் சச்சின் தெண்டுல்கரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இருவரும் பேசியபடி இருந்தனர். பின்னர் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, சச்சினிடம் சுக்லா, நிறைய சாதனைகளை படைத்திருக்கிறீர்கள். அதனை யாரேனும் முறியடிப்பார்கள் என நினைக்கிறீர்களா? என்றார்.
அதற்கு சச்சினோ, சாதனைகளை படைப்பதே அவற்றை முறியடிப்பதற்காகதான். அதனால், என்னுடைய சாதனை முறியடிக்கப்படும் என்றார். அப்படியானால், அது யாராக இருக்கும்? என நீங்கள் நினைக்கிறீர்கள் என சுக்லா விடாமல் கேட்டுள்ளார். அதற்கு சாப்பிட்டு கொண்டே சச்சின், என் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என நான் நினைக்கிறேன் என்றார்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான ஆட்டங்களிலும் விளையாடி 664 போட்டிகளில் 34 ஆயிரத்து 357 ரன்களையும், 100 சதங்களையும் சச்சின் அடித்துள்ளார். தவிர 164 அரை சதங்களும் இவருடைய சாதனைகளில் அடங்கும். மும்பையில், அவருடைய சொந்த மண்ணில் 2011-ம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி உலக கோப்பை கனவையும் பூர்த்தி செய்திருக்கிறார்.
டெஸ்ட் விளையாட்டில் 200 போட்டிகளில் ஆடி 15 ஆயிரத்து 921 ரன்களையும், 51 சதங்களையும் அவர் சேர்த்திருக்கிறார். ஒரு நாள் போட்டி தொடரில் 463 போட்டிகளில் ஆடி 18 ஆயிரத்து 426 ரன்களையும், 49 சதங்களையும் அவர் அடித்திருக்கிறார்.
இதில், விராட் கோலி 559 சர்வதேச போட்டிகளில் விளையாடி 85 சதங்களுடன் 28,215 ரன்களை சேர்த்திருக்கிறார். சச்சினின் சாதனையை நெருங்க கோலிக்கு 15 சதங்கள் தேவையாக உள்ளன. சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 16 சதங்கள் தேவையாக உள்ளன.
ஏற்கனவே ஒரு நாள் போட்டி தொடரில் 54 சதங்கள் அடித்து, சச்சினின் சாதனையை கோலி முந்தியுள்ளார். உலக கோப்பையில் சிறந்த வீரர் என சச்சின் (673 ரன்கள்) படைத்த சாதனையை, 2023 உலக கோப்பை போட்டி தொடரில் கோலி (765 ரன்கள்) முறியடித்து உள்ளார். 2027ம் ஆண்டு வரை கோலி விளையாடுவார் என கூறப்படுகிற சூழலில், சச்சினின் கணிப்பு பலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.