2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.;

Update:2026-01-24 22:37 IST

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இலங்கை, இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய இலங்கை 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அந்த அணியின் கேப்டன் அசலக்கா அதிகபட்சமாக 45 ரன்களையும், தனஞ்ஜெய டி சில்வா 40 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 46.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 75 ரன்களையும், ஹேரி புரூக் 42 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா, ஜெப்ரி வெண்டர்செ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை கொழும்புவில் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்