இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான் இல்லை - கங்குலி

இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.;

Update:2025-09-17 08:56 IST

புதுடெல்லி ,

ஆசிய கோப்பை தொடரில்  நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில்,

‘பாகிஸ்தான் அணி நமக்கு இணையான தரம் கொண்ட அணியாக இல்லை. நான் அவர்களின் கடந்த கால அணியை பார்த்து இருக்கிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியின் தரம் குறைந்துள்ளது. நீண்ட காலமாக நட்சத்திர வீரர்களாக வலம் வந்த விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ள மற்ற அணிகளை விட இந்தியா வெகுதூரம் முன்னிலையில் இருக்கிறது.

ஒருசில நாட்களில் மட்டும் பிற அணிகள் நம்மை தோற்கடிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான நாட்களில் நாம் சிறந்த அணியாக ஆதிக்கம் செலுத்துகிறோம். பாகிஸ்தான் அணி ஆடிய விதத்தை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது 15 ஓவர் வரை கிரிக்கெட் பார்த்தேன். அதன் பிறகு சேனலை மாற்றி மான்செஸ்டர் யுனைடெட்- மான்செஸ்டர் சிட்டி அணிகள் இடையிலான கால்பந்து போட்டியை பார்க்க தொடங்கிவிட்டேன்.

பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டத்தை பார்ப்பதை விட ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை கூட பார்க்கலாம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் இனிமேல் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாம் கடந்த 5 ஆண்டுகளாக இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தை தொடர்ந்து மிகைப்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் உடைந்து போகிறது. பெரும்பாலும் இந்த ஆட்டங்கள் ஒருதலைபட்சமாகவே இருக்கிறது’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்