தயவுசெய்து திரும்பி வாருங்கள் - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி சமீபத்தில் விடைபெற்றார்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்பாக கடந்த மே மாதம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அப்படிப்பட்ட அவர் திடீரென ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் விராட் கோலியை பலரும் மிஸ் செய்கின்றனர். களத்தில் அவரது ஆக்ரோஷம், அணியை முன்னின்று வழிநடத்துவது போன்றவற்றை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தவற விடுவதாக கருத்துகள் நிலவுகின்றன. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளதால் விராட் கோலி ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான மதன் லால், இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய கிரிக்கெட்டின் மீது விராட் கோலிக்கு இருந்த ஆர்வம் ஈடு இணையற்றது. ஓய்வுக்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர வேண்டும் என்பது எனது விருப்பம். மீண்டும் திரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. இந்தத் தொடரில் இல்லையென்றால், அடுத்த போட்டியில் அவர் மீண்டும் வர வேண்டும்.
என் பார்வையில், அவர் தனது ஓய்வை மாற்றியமைக்க வேண்டும். ஏனென்றால் அவர் 1–2 ஆண்டுகள் எளிதாக விளையாட முடியும். அவரது அனுபவத்தை இளம் வீரர்களுக்கு வழங்கிவிட்டு அதன்பிறகு அவர் வெளியேறலாம். இப்போது கூட தாமதமாகவில்லை. தயவுசெய்து திரும்பி வாருங்கள்" என்று கூறினார்.