கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற புஜாரா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
இந்திய முன்னணி வீரரான புஜாரா கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.;
புதுடெல்லி,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், செதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ‘சுவர்’ என்று அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 24-ம் தேதி அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.
அதன் பிறகு இளம் வீரர்களின் வருகையால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தாலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். இடையில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) வெல்ல முக்கிய பங்காற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார். அதுபோக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள செதேஷ்வர், உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவை அறிந்தேன். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்களும் கிரிக்கெட் சமூகமும் உங்கள் அற்புதமான சாதனைகளைப் பாராட்டி உள்ளனர். உங்கள் அபாரமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், உற்சாகமான பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில், நீங்கள் நீண்ட வடிவிலான விளையாட்டின் அழகை நினைவூட்டினீர்கள். உங்கள் அசைக்க முடியாத மனோபாவமும், நீண்ட நேரம் பெரும் கவனத்துடன் பேட்டிங் செய்யும் திறனும் உங்களை இந்திய பேட்டிங் வரிசையின் மையமாக ஆக்கியது. உங்கள் மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழல்களில், அற்புதமான திறமையும் உறுதியும் நிறைந்த தருணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இந்தியா முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெற்றபோது, நீங்கள் அடித்தளமாக இருந்தது ரசிகர்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கும்! மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை நீங்கள் காட்டினீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல தொடர் வெற்றிகள், சதங்கள், இரட்டை சதங்கள் மற்றும் பாராட்டுகள் இருந்தாலும், உங்கள் இருப்பு ரசிகர்களுக்கும் அணியினருக்கும் அளித்த அமைதியான உணர்வை எந்த எண்ணிக்கையாலும் அளவிட முடியாது.
இது உங்கள் நீடித்த பாரம்பரியமாகும், இது வெறும் எண்களுக்கு அப்பாற்பட்டது. கிரிக்கெட் மீதான உங்கள் ஆர்வம், சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தபோதிலும், சவுராஷ்டிராவுக்காகவோ அல்லது வெளிநாட்டிலோ முதல் தர கிரிக்கெட்டை விளையாடியதிலும் பிரதிபலித்தது. சவுராஷ்டிரா கிரிக்கெட்டுடனான உங்கள் நீண்டகால தொடர்பும், ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பும், பகுதியின் ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமைக்குரியதாக இருக்கும்.
உங்கள் தந்தை, ஒரு கிரிக்கெட் வீரராகவும் உங்கள் வழிகாட்டியாகவும் இருந்தவர், உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என நம்புகிறேன். பூஜாவும், அதிதியும் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் பயணத்தில் ஆதரவாக பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர்.
களத்திற்கு அப்பால், உங்கள் ஆழமான பகுப்பாய்வு ஒரு வர்ணனையாளராக கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது, மேலும் உங்கள் நுண்ணறிவுகளைக் கேட்க அவர்கள் ஆவலுடன் உள்ளனர். கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்!” என்று அதில் தெரிவித்துள்ளார்.