50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.;
image courtesy: IndianPremierLeague twitter
image courtesy: IndianPremierLeague twitter
முல்லாப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் இருவரும் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 12 ரன்களிலும், சிம்ரோன் ஹெட்மேயர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் ரியான் பராக் (43 ரன்கள்), துருவ் ஜூரெல் (13 ரன்கள்) அதிரடியாக விளையாட ராஜஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர், முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்களில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஜோப்ரா அசத்தினார்.
பஞ்சாப் அணியில் தொடர்ந்து களமிறங்கிய பிரப்சிம்ரன் 17 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த நேஹால் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேஹால் வதேரா அரைசதம் கடந்த நிலையில் 62 ரன்களில் அவுட்டானார். மேக்ஸ்வெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.