வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள தயார் - மிட்செல் சான்ட்னெர்
எங்களது வீரர்கள் வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என நினைக்கிறேன் என்று சான்ட்னெர் கூறியுள்ளார்.;
Image Courtesy: @BCCI
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை முன்னிட்டு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இறுதிப்போட்டியில் நெருக்கடியை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே சிறந்த சில கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன்.
அவர்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். இது இன்னொரு சாதாரண ஆட்டம் என சொல்வது எளிது. ஆனால், அதே நினைப்புடன் விளையாடுவது கடினம். முடிந்த வரை உற்சாகமாக விளையாட முயற்சிப்போம். இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சை ஐ.பி.எல். போட்டியில் சந்தித்துள்ளோம். அவரிடம் (வருண் சக்கரவர்த்தி) கொஞ்சம் மர்மம் இருந்தாலும் சில வீரர்கள் அவரை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
அவரது பவுலிங் தொடர்பான சில வீடியோ காட்சிகளை பார்த்துள்ள எங்களது வீரர்கள் அவரது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என நினைக்கிறேன். 115 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசக்கூடிய ஆர்ம் வகை பவுலிங் , அதுதான் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வருண் சக்கரவர்த்தி பெரிய சவாலாக இருப்பார் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.