டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: விராட் கோலி குறித்து சச்சின் கூறியது என்ன..?

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி இன்று ஓய்வை அறிவித்தார்.;

Update:2025-05-12 18:54 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் விராட் கோலியின் ஓய்வு குறித்து சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில், "நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கடைசி டெஸ்ட் போட்டியின்போது, உங்கள் சிந்தனைமிக்க செயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. அது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்று. அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது, அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் இருந்து வருகிறது. நீங்கள் எனது ஆழ்ந்த பாராட்டையும் வாழ்த்துகளையும் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

எண்ணற்ற இளம் தலைமுறையினர் கிரிக்கெட்டில் நுழைவதற்கான உத்வேகத்தை தூண்டியதுதான் நீங்கள் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து. அசாத்தியமான டெஸ்ட் பயணம் உங்கள் வசமாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்காக வெறும் ரன்களைத் தாண்டி, கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்கித் தந்துள்ளீர்கள்.மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்