ரோகித், பாண்டிங் இல்லை.. கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார்.? - பொல்லார்டு பதில்
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.;
image courtesy:PTI
கயானா,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த சாதனையாளர். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். விக்கெட் கீப்பங்கிலும் சாதனைகள் படைத்துள்ள அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை படைத்தவர்.
அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியவர். ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரரான பொல்லார்டிடம் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பொல்லார்டு, “மகேந்திரசிங் தோனி ஆல் டைம் சிறந்த கேப்டன். அவருடன் நான் எப்போதும் ஒரே அணியில் விளையாடியதில்லை. ஆனால் களத்தில் அவருடைய தந்திரோபாயங்களை நான் நேரடியாக பார்த்துள்ளேன். மேலும் நான் எம்.எஸ். தோனியை மிகவும் ரசித்தேன்” என்று கூறினார்.