சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா... கேப்டன் பவுமா கூறியது என்ன..?

3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.;

Update:2025-06-15 08:04 IST

Image Courtesy: @ICC

லார்ட்ஸ்,

3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி. கோப்பை ஒன்றை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது.

இந்நிலையில், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த சில நாட்கள் எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த போட்டிக்காக நாங்கள் கடுமையாக தயாரானோம். நாங்கள் நிறைய நம்பிக்கையுடனும், அதேநேரத்தில் மற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லாமலும் இங்கு வந்தோம். இந்த நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது எங்களுக்கும், எங்கள் நாட்டு மக்களுக்கும் சிறப்பான தருணமாகும். இந்த வெற்றி எங்கள் மனதில் நிலைத்து நிற்கும். அணிக்குள் நல்ல உத்வேகம் இருந்தது. இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து கடினமான உழைத்தோம். நாங்கள் தொடர்ச்சியாக பலமுறை வெற்றியின் விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்து வேதனை அடைந்து இருக்கிறோம்.

வரப்போகிற பல வெற்றிகளுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். ரபடா அற்புதமான வீரர். அவர் இன்னும் சில ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் புகழ் பெற்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். சர்ச்சைக்கு மத்தியில் போட்டிக்கு வந்த அவர், தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். மார்க்ரம் அருமையாக விளையாடினார்.

அவர்கள் இருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப விளையாடி இருக்கிறார்கள். எங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். ஆனால் பலவீனமான அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனை இந்த வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்