புதிய சிம் வாங்கியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... கோலி, டி வில்லியர்சிடம் இருந்து வந்த அழைப்புகள்.. சுவாரசிய சம்பவம்
புதிய சிம் கார்டு வாங்கியவருக்கு ஆர்சிபி கேப்டன் படிதாரின் பழைய நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் படிதாரின் பழைய மொபைல் நம்பர் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் அவரது நம்பரை தொலைத்தொடர்பு வழங்குநர் செயலிழக்க செய்தார். பின்னர் அந்த நம்பரை மீண்டும் வேறு ஒருவருக்கு ஒதுக்கியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் என்பர் இந்த நம்பரை வாங்கி தனது நண்பர் கேம்ராஜ் உதவியுடன் ஆக்டிவேஷன் செய்துள்ளார். ஆக்டிவேஷன் செய்த சிறிது நேரத்திலேயே, வாட்ஸ்அப் ஓபன் செய்துள்ளனர். அதில் வாட்ஸ்அப் புரோபைல் படமாக படிதாரின் புகைப்படம் தோன்றுவதைக் கவனித்தனர். இருப்பினும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சிறிது நேரத்திலேயே அது படிதார் என நினைத்து விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் அந்த நம்பருக்கு வர தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் குழப்பமடைந்தாலும், மணிஷ் மற்றும் கேம்ராஜ் இந்த சூழ்நிலையை அறியாமல் நகைச்சுவையாக எடுத்து கொண்டனர். அந்த நம்பரின் முக்கியத்துவத்தை அவர்கள் அறியவில்லை.
நிலைமை மோசமானதை அறிந்த ரஜத் படிதார் மணீஷைத் தொடர்பு கொண்டு அந்த எண்ணின் முக்கியத்துவத்தை விளக்கினார். இருப்பினும் நிலைமை உணராத அந்த இளைஞர்கள் நகைச்சுவையாக, "நான் எம்.எஸ். தோனி பேசுகிறேன்" என்று பதிலளித்துள்ளனர். அதற்கு படிதார், "சரி, நான் போலீசாரை அனுப்புகிறேன்" என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களில் மணீஷின் வீட்டுக்கு போலீசார் வந்து விசாரித்தபோதுதான் உண்மை என தெரிய வந்துள்ளது. அதன் பின் தீவிரத்தை உணர்ந்த மணீஷ் மற்றும் கேம்ம்ராஜ் முழுமையாக ஒத்துழைத்து, சிம் கார்டை திருப்பி கொடுத்து விட்டனர்.
இப்படி எதிர்பாராத விதமாக புதிய சிம் கார்டு வாங்கியவருக்கு கோலி, டி வில்லியர்சிடம் பேச வாய்ப்பு கிடைத்த சுவாரசிய சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி உள்ளது.