டி20 கிரிக்கெட்: ஆஸி.க்கு எதிரான தோல்வி.. முடிவுக்கு வந்த ஷிவம் துபேவின் வெற்றி பயணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2025-10-31 17:41 IST

image courtesy:PTI

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷிவம் துபேவின் 6 ஆண்டு கால வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:- சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த போட்டிக்கு முன்னதாக ஷிவம் துபே கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தார். அதாவது அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் அவரது 6 ஆண்டு கால வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்