ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் இந்தியா ஏ 116/1

இந்தியா ஏ தரப்பில் ஜெகதீசன் 50 ரன்னுடனும், சாய் சுதர்சன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.;

Update:2025-09-17 18:47 IST

Image Courtesy: X (Twitter) /File Image

லக்னோ,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (4 நாட்கள்) விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது.

மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 73 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய ஏ தரப்பில் லியாம் ஸ்காட் 47 ரன்னுடனும், ஜோஷ் பிலிப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட்டை இழந்து 532 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. தொடர்ந்து இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ஜெகதீசன் களம் கண்டனர்.

இதில் ஈஸ்வரன் 44 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். இந்திய ஏ அணி 30 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 116 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

இந்தியா ஏ தரப்பில் ஜெகதீசன் 50 ரன்னுடனும், சாய் சுதர்சன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய ஏ அணி இன்னும் 416 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்