இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: அந்த தமிழக வீரரை சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.;

Update:2025-05-02 15:26 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இந்த மாதம் 2வது வாரத்திற்குள் இந்திய அணி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான சாய் சுதர்சன் நிச்சயம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சாய் சுதர்சன் என்ற இந்த இளைஞன் இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு தரமான வீரர் போல் தெரிகிறார். எனது பார்வை அவர் மீது எப்போதும் இருக்கும். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்பதற்கான காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் வீரர்களில் அவர் நிச்சயம் முதல் இடத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்