டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மாபெரும் சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் ஜக்காரி பவுல்க்ஸ்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் ஜக்காரி பவுல்க்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.;
image courtesy:twitter/@BLACKCAPS
புலவாயோ,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நியூசிலாந்து அணியில் ஜக்காரி பவுல்க்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 125 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட்ஹென்றி 5 விக்கெட்டும், அறிமுக வீரர் ஜக்காரி போக்ஸ் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது ஜிம்பாப்வே அணியை விட 476 ரன்கள் அதிகமாகும். ஹென்றி நிகோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கான்வே 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்பே அணியை ஓயிட்வாஷ் ஆக்கியது. நியூசிலாந்து தரப்பில் சக்காரி பவுல்க்ஸ் 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி மற்றும் டப்பி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கான்வே ஆட்ட நாயகனாகவும் மேட் ஹென்றி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜக்காரி பவுல்க்ஸ் மொத்தம் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஜக்காரி பவுல்க்ஸ் - 9/75
2. வில் ஓ ரூர்க் - 9/93
3. மார்க் கிரெக் - 8/188
4. காலின் டி கிராண்ட்ஹோம் - 7/64
5. அஜாஸ் படேல் - 7/123