டெஸ்ட் தரவரிசை: முதலிடம் பிடித்த ஜோ ரூட்
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (867 புள்ளி) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.;
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (888 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் (104 ரன்) அடித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.. இதே டெஸ்டில் 11 மற்றும் 23 ரன் வீதம் எடுத்து சொதப்பிய புரூக் 862 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (867 புள்ளி) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
இந்திய வீரர்களான ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திலும் (801 புள்ளி), ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), கேப்டன் சுப்மன் கில் 9-வது இடத்திலும் (3 இடங்கள் பின்னடைவு) உள்ளனர். அதே சமயம் லார்ட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா 5 இடங்கள் உயர்ந்து 34-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் சதமடித்த லோகேஷ் ராகுல் 5 இடங்கள் அதிகரித்து 35-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.