நான் விளையாடுவதை விட அதுதான் எனக்கு முக்கியம் - துருவ் ஜூரெல் நெகிழ்ச்சி பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் விளையாடி வருகிறார்.;
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மறுபுறம் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் விலகிய நிலையில் துருவ் ஜூரெல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். முன்னதாக இந்த தொடரில் ரிஷப் பண்ட் காயத்தால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் (3 மற்றும் 4-வது போட்டிகளில்) துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டு பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் பிளேயிங் லெவனில் தான் விளையாடுவதை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம் என்று துருவ் ஜூரெல் நெகிழ்ச்சியாக சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "என்னை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ இந்திய அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம். ஏனெனில் ஒரு அணியின் வீரராக நாம் விளையாடுகிறோமோ, இல்லையோ அணி வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே விரும்புவோம். அந்த வகையில் நான் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே விளையாடி வருகிறேன்.
என்னுடைய சிறு வயதிலிருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு போட்டியிலாவது விளையாடி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே, நான் அந்த தருணத்தை மிகவும் ரசித்தேன். எனது அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை சமாளிப்பது எப்போதும் ஒரு சிறப்பான விஷயம்.
நீங்கள் வெளிநாட்டில் சிறப்பாக செயல்பட்டால், மக்கள் உங்களை உயர்வாக மதிப்பிடுவார்கள். அதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். வெளியே சென்று என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.