லண்டனில் பயிற்சியை தொடங்கிய விராட் கோலி.. ரசிகர்கள் உற்சாகம்

விராட் கோலி கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடினார்.;

Update:2025-08-23 17:49 IST

image courtesy:PTI

லண்டன்,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 82 சதங்கள் அடித்துள்ள அவர், அதிக சதம் அடித்த 2-வது வீரராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (51) அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

தற்போது தனது கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் அவர் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். அத்துடன் யாரும் எதிர்பாரத வண்ணம் அண்மையில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த சூழலில் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை (2027) வரை அவர் விளையாடுவார் என்று பலரும் கூறிவருகின்றனர். மறுபுறம் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் ஏறக்குறைய 2 வருடங்கள் இருப்பதால் தொடர்ந்து அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது.

விராட் கோலி கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின் லண்டன் சென்ற அவர் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இருப்பினும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கடைசியாக கிரிக்கெட் விளையாடி ஏறக்குறைய 80 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு ரோகித் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டார். விராட் கோலி குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி பயிற்சியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து விராட் கோலி வெளியே வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் பயிற்சிக்கான டீ-ஷர்ட் அணிந்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி பயிற்சியை மீண்டும் தொடங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. இது விராட் கோலியின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்