விராட் கோலியின் இந்த அணுகுமுறை ஆணவம் அல்ல, மாறாக.. - இந்திய முன்னாள் வீரர் கருத்து
களத்தில் விராட் கோலி காட்டும் ஆக்ரோஷத்தை ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 82 சதங்கள் அடித்துள்ள அவர், அதிக சதம் அடித்த 2-வது வீரராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (51) அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.
பேட்டிங் மட்டுமின்றி களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு அசராமல் விராட் கோலி தரமான பதிலடிகளைக் கொடுப்பார். மேலும் விக்கெட்டுகள் விழுந்தால் அதை அவர் வெறித்தனமாக கொண்டாடுவார். இருப்பினும் அவருடைய ஆக்ரோஷம் சிலருக்கு பிடிக்காததாகவே இருக்கிறது. அதனால் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விராட் கோலி தனது ஆக்ரோஷத்தைக் குறைத்துக்கொள்ள கூடாது என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். அவ்வாறு குறைத்து கொண்டால் அவர் இதே விராட் கோலியாக இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “விராட் கோலி எதையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. சிலர் அவருடைய குணத்தை ஆக்ரோஷம் என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் அதை ஆர்வம் என்று அழைப்பேன். விராட் கோலி ஆக்ரோஷமானவரா? என்று கேட்டால் இல்லை. அனேகமாக அவர் விளையாட்டின் மீது வெறித்தனம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இருப்பினும் விராட் அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை அவர் தன்னுடைய அந்த ஆக்ரோஷத்தை குறைத்தால், அவரால் இதே விராட்டாக இருக்க முடியாது. விராட் கோலியின் இந்த அணுகுமுறை ஆணவம் அல்ல, மாறாக விளையாட்டின் மீதான ஆழமான அன்பு” என்று கூறினார்.