2010 போல இந்த ஆண்டும் மீண்டு வருவோம் - சிஎஸ்கே சி.இ.ஓ.நம்பிக்கை
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.;
image courtesy:PTI
சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 8 லீக் போட்டிகளில் ஆடி 6 தோல்வி, 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது.
எனவே எஞ்சிய 6 ஆட்டங்களிலும் தொடர்ந்து வென்றால் மட்டுமே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். இல்லாவிட்டால் வெளியேற வேண்டியது வரும்.இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது
இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 2010-ம் ஆண்டு போல மீண்டெழுந்து இந்த சீசனிலும் கோப்பையை கைப்பற்றும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த தொடரில் சி.எஸ்.கே. இதுவரை சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதனால் நீங்கள் அதிருப்தியில் இருக்கலாம். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். 2010-ம் ஆண்டு 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்று அசத்தியது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டும் மீண்டு வந்து கோப்பையை வெல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் நம்முடைய வீரர்கள் உறுதியாக உள்ளனர்" என்று கூறினார்.
இவர் கூறுவது போல 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் முதல் 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்த சென்னை அணி, பின்னர் அபார எழுச்சி பெற்று கோப்பையை வென்று அசத்தியது.