சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் கூறியது என்ன..?
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோத உள்ளன.;
image courtesy: ICC
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி வரும் 9-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை. மறுபுறம் நியூசிலாந்து அணி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இதனால் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் பைனலில் தாங்கள் வெல்வது உட்பட எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். எனவே லீக் சுற்றில் சந்தித்த தோல்வியில் கிடைத்த பாடங்களை வைத்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி வில்லியம்சன் பேசியது பின்வருமாறு:- "துபாயில் இந்தியா சாதகத்தைக் கொண்டிருப்பது விளையாட்டின் ஒரு அங்கம். அங்குள்ள சூழ்நிலைகள் கண்டிப்பாக நிறைய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அது இயற்கையின் இயல்பு என்று நினைக்கிறேன். உங்களிடம் இருக்கும் எந்தவொரு போட்டியிலும் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்தியாவுக்கு எதிராக அங்கு நாங்கள் விளையாடிய கடைசி போட்டி மகிழ்ச்சியாக இல்லை. அங்கே நல்ல பிட்ச்கள் உள்ளன.
இந்தியா ஒரு தலை சிறந்த அணியாக நன்றாக விளையாடுகிறது. எனவே கடந்த போட்டியில் இருந்து நாங்கள் பாடங்களை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வதற்கு முக்கியம். இப்போட்டியை விடுங்கள். இறுதிப்போட்டியில் எதுவும் நடக்கலாம். கடந்த போட்டி ஒரு சிறந்த சூழ்நிலையாக இருந்தது. அது மீண்டும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எங்களுடைய கவனம் அடுத்தப் போட்டி, மைதானம், எதிரணி ஆகியவற்றில்தான் இருக்கிறது. அங்கே ஒரு முறை நாங்கள் விளையாடியதில் கிடைத்த நேர்மறையான விஷயங்களை இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு எப்படி எடுத்து செல்கிறோம் என்பது முக்கியம். பிட்ச் என்பது இயற்கை. நாங்கள் அந்த இறுதிப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்" என்று கூறினார்.